Home

வள்ளலாரின் திருவருட்பா

எஸ். கருணானந்தராஜா

'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி'

  1. என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது.

வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்த உருவ வழிபாட்டிற்கு உடன்படுவனவாகவும், ஆறாம் திருமுறை இறைவனை ஒளிவடிவில் உணரும் சமயாதீத ஞானத்தை உணர்த்த முற்படுவதாகவும் அறிஞர் கருதுகின்றனர். அதாவது முதல் ஐந்தும் தோத்திரம் மிகுந்தனவாகவும் ஆறாவது சாத்திரக் கருத்துக்கள் மிகுந்தனவாகவும் உள்ளன. மேலும் கூறுவதானால் சமய சன்மார்க்கத்தைப் போதிப்பனவாக முதல் ஐந்தும் காணப்பட, ஆறாவது திருமுறைப் பாடல்கள் சமரச சுத்த சன்மார்க்க நெறியினைப் புகட்டுவனவாகக் காணப்படுகின்றன.

வள்ளலாரின் அருட்பாக்களுக்குப் பலர் உரையெழுதியிருந்தாலும் ஆறு திருமுறைகளுக்குமான முழுமையான உரையை பேராசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் செய்துள்ளார். அதனை பத்துப் பாகங்களாக வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தினர் வெளியிட்டுள்ளனர். வள்ளல் டாக்டர் பொள்ளாச்சி மகாலிங்கமவர்களின் வேண்டுகோளின் பேரில் அவரது இல்லத்திலிருந்து ஏழு வருடங்கள் உழைத்து பேராசிரியர் இவ்வுரையைச் செய்து முடித்ததாகத் தெரியவருகிறது.

வள்ளலாரைப் போலவே ஆறுமுகநாவலரும் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவராவார். அருட்பாவை திருமுறைகளாக வகுத்தமையை அக்காலத்தில் ஆறுமுகநாவலர் எதிர்த்து அதனை மருட்பாவென இழிந்துரைத்தது மட்டுமன்றி அப்பிரச்சனையைக் கோட்டுவரை கொண்டு சென்றார். அருட்பாவென்னும் பெயர் வாபஸ் பெறப்படவேண்டுமென்பதே நாவலரின் கோரிக்கையாகும்.

வழக்கு மஞ்சக்குப்பம் மாவட்ட நீதிமன்றிற்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டது. வள்ளலார் கோட்டுக் கூண்டில் ஏற்றப்பட்டார். வள்ளலார் கூண்டிலேற வந்த சமயம் அவரது அருட்திரு முகத்தைக் கண்டு நீதிபதி (மாவட்ட முன்சீப்) முத்துசாமி ஐயர் எழுந்து நின்றாரென்றும், நாவலரும் வள்ளலாரை வணங்கியபடி எழுந்து நின்றாரென்றும் கூறப்படுகின்றது. இதுபற்றி நீதிபதியிடம் கேட்டபோது அவர் தன்னையறியாமலேயே அச்செய்கையைச் செய்ய நேரிட்டதென்றும், அதுபற்றித் தன்னால் மேலதிகமாக எதுவும் சொல்வதற்கில்லையென்றும் கூறியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் பின்னர் சென்னை ஹைக்கோட் நீதிபதியாகப் பதவிவகித்தார். அவருக்காக ஒரு சிலையும் சென்னை ஹைக்கோட் வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கின்றது.

வழக்காளியான நாவலரிடம் வள்ளலாருக்கு அவர் செய்த மரியாதையைப் பற்றிக் கேட்டபோது அறிவும் அருளும் நிரம்பப் பெற்று இறைவனருளால் அதீத சக்தியைக் கொண்டிருப்பவராக வள்ளலார் உள்ளார் என்று நாவலர் கூறியதாகவும் தெரிய வருகின்றது.

வழக்குத் தீர்ப்பு வள்ளலாருக்குச் சாதகமாக அமைந்ததோடு அவரது அருட்பாக்கள் புனிதமானவையாகவும் தமிழுலகில் இலக்கியச் செழுமை மிக்கதோர் பெட்டகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

உசாத்துணை
http://thiruvarutprakasavallalar.blogspot.com/2008/03/8-appearance-in-judicial-court.html

நாவலர் அறிவாளியாகவன்றி ஓர் அருளாளராக இருந்தாரில்லை. அதனால் சகலவுயிர்களையும் குறிப்பாக மனிதர்களை ஒரே ஆன்மாவின் வடிவமாகப் பார்க்கும் பரஞானமற்றவற்றராக இருந்தார். வைதீக நெறியை அவர் பின்பற்றினாலும் ஆன்ம ஞானம் சித்திக்காததனால்; சாதீயம் அவரைத் தடுத்தாட்கொண்டு விட்டது. அதனால் தான் அமைத்த பாடசாலைகளிலேயே தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் கல்வி கற்கச் சேர்க்க விடாமற் பண்ணிவிட்டது.

மாறாக வள்ளலாரோ அனுபூதிமானாக, எல்லாவுயிர்களிடத்தும் இறைவனைக் கண்டுதெளியும் ஆத்மாஞானத் தெளிவுடையவராய் இருந்தார். அதனால் அவரிடம் சனாதன வைதீகக் கொள்கைகளுக்கு மாறாகப் புரட்சிகரமான கொள்கைகள் உருவாயின. சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயமொன்றை அவர் உருவாக்கப் பாடுபட்டார். இறைவனின் படைப்பில் அனைவரும் சமமேயென்ற மெய்யறிவு சிதம்பரம் தீட்சிதர்களுட்படப் பல சனாதனிகளை அவர்மீது எரிச்சலடையச் செய்தது. பலரின் பகையையும் சம்பாதித்துக் கொண்டார்.

தமிழ் என்னும் சொல்லுக்கான வள்ளலாரின் விளக்கம் வடமொழிச் சொற்கள் மிகுந்து எளிதில் புரியமுடியாததாகவுள்ளது. இருப்பினும் அவ்விளக்கத்தின் முடிவுரை இங்கே தரப்படுகிறது:

'மருளியற்கை மலஇருளைப் பரிபாக சத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சித்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர ககன, நடன அருட்பெருஞ்சோதியென்னும் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீதவியலால் அனுபவிக்கும் இயற்கையுண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க. இதன்கருத்து யாதெனில்: தமிழ் பாஷையே அதிசுலபமகச் சுத்த சிவானு பூதியைக் கொடுக்குமென்பதாம்.' – இதுவே அவரது வார்த்தைப் பிரயோகம் - பக்கம் 306 திரு அருட்பா உரைநடைப் பகுதி - நான்காம் பதிப்பு, பாரதி அச்சகம் சென்னை.

மேற்கண்ட வள்ளலாரின் கூற்றின்மூலம் தமிழில் பூசை வழிபாடுகள் இயற்றுதல் மூலமே அனு பூதியை இலகுவாகப் பெறமுடியுமென்பதை உணர முடிகின்றது.

அவரின் விளக்கத்தின்படி: திருவாசகம், தேவாரம், திருமந்திரம் ஆகியன பரமார்த்த ரகசியங்களையுடையன வாகவும், அத்தகைய கருத்துக்களைக் கொண்ட ஆரிய, ஆந்திர, மகாராஷ்டிர மொழிப் பாஷ்யங்களுக்கான பொருள் விளக்கம்பெற அந்தந்த மொழிப் பண்டிதர்களைத் தேடித்திர வேண்டியுள்ள தென்றும், தேடினாலும் கிடைப்பதில்லையென்றும் ஆகவே தமிழிலேயே வழிபாடியற்றல் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்றும் அறிய முடிகின்றது.

இதன் மூலம் தமிழிலேயே வழிபாடியற்றல் வேண்டுமென்னும் கருத்தானது வள்ளலார் காலத்திலேயே தோற்றம் பெற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது.

வள்ளலாரின் இத்தகைய போக்கு சிதம்பரம் தீட்சிதர்களின் பிழைப்பைக் கெடுக்கும் போக்காகக் காணப்பட்டதால் அவர்களாலேயே வள்ளலார் கொலை செய்யப்பட்டார் என்று கூறுவோரும் உளர். ஆனால் வள்ளலாரைப் பின்பற்றுபவர்களோ, வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் அவர் கட்டிய கட்டிய சித்திவளாகத்தில் 1874 தைப்பூசத்தன்று ஓர் அறைக்குள் சென்று அதனைச் சிலகாலம் திறக்க வேண்டாமென்று கூறிக் கதவைப் பூட்டிவிட்டு உள்ளேயே சோதியில் கலந்தார் என்று நம்புகின்றனர். அதன் பிறகு அவர் அங்கு காணப்படவில்லை.

வள்ளலாரின் அருட்பாக்கள் சில கிழக்கு மாகாணத்தில் கோயில்களில் பாடப்படுவது வழக்கமாகும். குறிப்பாக 'அம்பலத்தரசே அருமருந்தே...' (ஆறாம் திருமுறை பாடல்: 2256 பக்கம்: 430)

என்னும் பாடல் அங்கு கூட்டுப் பிரார்த்தனைகளில் பஜனைப் பாடலாகப் பாடப்படுகின்றது.

'ஒருமையுடன் உனது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க் வேண்டும்
பெரு நெறிபிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே'

பாடல்: 2938 பக்கம்: 554

என்னும் பாடலும் மிகப் பிரபலமானது. கொஞ்சும் சலங்கை என்னும் படத்தில் சாவித்திரி பாடும் பாடல் காட்சியொன்றில் இப்பாடல் இடம்பெறுகின்றது.

வள்ளலாரின் பாடல்களில் பெரும்பாலானவை எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய பாடல்களாயிருந்தாலும், யோக ஞான சாதனைகளை உட்பொருளாக்கி அவர் பாடிய பாடல்கள் சித்தர் பாடல்களைப் போல் சற்று ரகசியப் பொருள் பொதிந்தனவாகக் காணப்படுகின்றன.

'கையறவில்லாத நடுக் கண்புருவப் பூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு
ஐயர்மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு'

ஆறாம் திருமுறை: பாடல் - 2242 பக்கம்: 428.

என்ற பாடல் அதற்கு ஓர் உதாரணமாகும். நடு நெற்றிக்குச் சற்றுக் கீழேயுள்ளதான புருவ நடுவில், புலனைச் செலுத்தி அவ்விடத்தை விட்டு கவனம் அகலா வண்ணம் பூட்டிடுவதால்; மூன்றாம் கண்ணான நெற்றிக்கண் திறந்து ஒளிவெள்ளம் பாயும். யோகியர் அதில் லயித்திருப்பார். அந்த விளையாட்டினால் வரும் ஞான வெளிப்பையே வேதங்களும் பாடுகின்றன. என்பதே அதன் கருத்தாகும்.

இங்கே கையறவில்லாத என்பதன் மூலம் எம்மைக் கைவிட்டுவிடாத சாதனை என்ற பொருளைப் பெறமுடியும், மாறாக அதனைக் கையுறவில்லாத என்றும் கொள்ளலாம். கைவிரலினால் நெற்றிப் பொட்டில் தொட்டபடி புருவ நடுவில் கவனத்தைச் செலுத்துவதையே அது குறிக்கும். சிலர் அவ்வாறு அந்தச்சாதனையை செய்வதுண்டு. விவேகானந்தருக்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் நெற்றிப்பொட்டில் ஓர் வில்லுக்கத்தியால் சற்றுக் கீறி அதிலே கவனத்தைப் போடுமாறு காண்பித்தபோது விவேகானந்தர் உடனடியாக நிர்விகற்ப சமாதிநிலையை அடைந்தாரென்றும். பரமஹம்சர் அதுபற்றி விவேகானந்தரிடம் பாராட்டிப் பேசியபோது நான் பலவருடங்களாக முயன்று அடைந்த அந்த சமாதி நிலையை நீ சில நிமிடங்களிலேயே அடைந்து விட்டாய் என்று மெச்சியதாகவும் வரலாறுண்டு. அந்த நெற்றிக்கண் யோகத்தையே வள்ளலார் இங்கே குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

இந்த மூடுமந்திரமான பாடலுக்கு அடுத்ததாக வரும் பாடல்கள் அந்தத் தியான சாதனையினால் வரும் இன்பானுபவத்தை எளிமையாக விளங்கப்படுத்துகின்றன.

'சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்விலெனக்கென்னை இனி ஏச்சு என்பிறவித் துன்பமெல்லாம் இன்றோடே போச்சு'

பாடல் 2243 பக்கம் 428.

என்ற பாடல் வரிகளில் புருவமத்தியில் துலங்கும் ஒளிப்பிரமத்தின் லயிப்பில் தான் பெற்ற இன்பத்தினால் சித்தானுபவமாகிய சிற்றம்பலமும் கண்முன்னே தோன்றும் பொன்னம்பலமும் சொந்தமாகிவிட்டதான ஞானானுபவத்தைப் பெறுவதோடு, தேவர்கள், திருமால், பிரமன், உருத்திரன் ஆகியோரின் ஞான பாசையும் விளங்குவதாயிற்று, இல்லறத்திலிருந்தே இனி நான் நல்லறமியற்ற முடியும், என்பிறவித் துன்பமெல்லாம் இன்றோடே போய்விட்டது என்கிறார் வள்ளலார். வள்ளலார் தனது தமக்கையாரின் மகளைத் திருமணம் செய்து திருமணபந்தத்தில் சிலகாலம் வாழ்ந்தவரென்பதும் பின்னர் தனது இல்வாழ்வை வெறுத்து துறவையே மேற்கொண்டாரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

'அருள் சோதித் தெய்வமெனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்.
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வமுயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெமக்கருளும் தெய்வம்
தெருட்பாடலுவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்'

ஆறாம் திருமுறை. பாடல்: 737, பக்கம்:179

என்ற மற்றோர் அழகிய இசைப்பாடலும் திரையிசையாக இசைக்கப்படுகின்றது.

வள்ளலாரின் பாடல்களில் பல்வேறுபட்ட செய்யுள்வகைகளைக் காணக்கூடியதாயுள்ளது. இவை மரபு வழிச் செய்யுள்களை யாக்க விரும்புவோருக்குச் சிறந்த உதாரணங்களாக அமைந்துள்ளன. அச்செய்யுள் வகைகளின் பட்டியல்:

1.வெண்பா
11. வஞ்சித்துறை
2. நேரிசை வெண்பா
12. வஞ்சி விருத்தம்
3. நாலடித் தரவுக் கொச்சகக்கலிப்பா
13. கலிநிலைத் துறை
4. கலிவிருத்தம்
14. கலிச்சந்த விருத்தம்
5. கலித்துறை
15. கலிவண்ணத்துறை
6. கட்டளைக் கலித்துறை
16. வண்ணவிருத்தம்
7. கட்டளைக் கலிப்பா
17. கலிநிலை வண்ணத்துறை
8. கொச்சகக் கலிப்பா
18. குறள் வெண் செந்துறை
9. தரவுக் கொச்சகக் கலிப்பா
19. அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
10. ஆசிரியத் தாழிசை
20. எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
21. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

போன்றனவாம். மேற்கண்ட பட்டியலிருந்தே வள்ளலாரின் புலமை புலனாகின்றது. மிகவும் சிறப்பான சந்த நடைகளுடன் எழுதப்பட்டுள்ள இந்தச் செய்யுள்களில் தனியே இலக்கியச் சிறப்பு மட்டுமன்றி பக்திப் பெருக்கும் அப்பக்தியினால் கிடைத்த ஞானானந்த உணர்வு வெளிப்பாடும் காணப்படுகின்றன. புலமை தெய்வீக சக்தியின் ஓர் விளைவென்பது வள்ளலாரின் பாடல்களிலிருந்து புலப்படுகின்றது. அதனாலேயே வள்ளலாரை ஓர் சிறந்த அனுபூதிமானாகப் பலரும் போற்றி அவர் வழியைப் பின்பற்றுகின்றனர்.

தேவார முதலிகள் மணிவாசகர் உட்பட பிற்காலத்துப் பட்டினத்தடிகள் தாயுமானவர் போன்றவர்களுக்கு அடுத்தததாக வந்த இடைவெளிக்குப்பின்னர் வள்ளலாரே தமிழ்நாட்டில் பக்திச்சுவையை மீண்டும் கொண்டு வந்து சமய மறுமலர்ச்சிக்கு உயிரூட்டினார் என்பதை மறுப்பதற்கில்லை.

தெய்வீகப் பாடல்களால் இறைவனைத் தமிழ் செய்தது மட்டுமல்லாது மக்கட் சேவையிலும் ஈடுபட்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் உட்பட பலவகை நன்மைகளையும் வள்ளலார் செய்யத் தொடங்கினார். வடலூர் சன்மார்க்க நிலையத்தில் உள்ள தர்மசாலையில் வள்ளலாரின் காலத்திலிருந்தே மூட்டப்பட்ட அடுப்பு இன்றும் அணையாது பாதுகாக்கப்பட்டு எழை எளியவர்களுக்காக அன்னதானம் செய்யப்படுகின்றது.

வள்ளலாரின் திருவருட்பா ஆறு திருமுறைகள் மட்டுமல்லாது அவரது உரை நடைப்பகுதியும் உள்ளது. அதனையும் திருவருட்பா உரைநடைப் பகுதியென்றே கூறுவர். வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தினால் அவ் வுரைநடைப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் உரைநடை நூல்கள், வியாக்கியானங்கள், மருத்துவக் குறிப்புகள், உபதேசங்கள், வள்ளலார் எழுதிய திருமுகங்கள், அழைப்பிதழ்கள், விண்ணப்பங்கள் என்று பல பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறிகள் சுருக்கமாயப் பின்வருவனவாகும்:

• கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி வடிவினர்
• சிறுதெய்வ வழிபாடுகளைத் தவிர்த்தல் வேண்டும், தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி செய்தலாகாது
• பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல், அதுவே கடவுள் வழிபாடு
• உலக அமைதிக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டைக் கடைப்பிடித்தல் வேண்டும்
• மது மாமிசம் உண்ணலாகாது
• எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி நடத்தல் வேண்டும்
• சாதி, இனம், சமயம் முதலிய வேறுபாடுகளின்றி இருத்தல் வேண்டும்
• எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்
• இறந்தவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும். கருமாதி, திதிச் சடங்குகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பனவாம்.

வைதிகரான மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் அருளிய கீழ்வரும் வெண்பா வள்ளலாரின் அருட்பாவின் மகிமையைக் கூறுவதாகவுள்ளது.

தண்ணீர் விளக் கெரித்த தன்மை போன் மாந்தர்கள்தம்
உண்ணீர் சிவம் விளங்க ஓங்குவிக்கும் - கண்மணியாம்
நங்கள் இராமலிங்கன் நல்ல அருட்பாமுறையைத்
துங்கமுற மாணா தொழு

இக்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.