நெல்சன் றொலிலாலா மண்டேலா

பிறந்த தேதி:18–07-1918

 

மீண்டும் முகப்பிற்கு

 

மண்டேலாஎன்னும்மனிதப் புனிதனுக்கு

மரணலோகத்தின்வாயிலை நீ இப்போது

அண்டேலாதென்று அனுமதி மறுத்துக் காலன் எழுதிய கடிதத்தில்: 'உனக்கு அழைப்பில்லை இப்போது

ஆறுதலாய் வா!' என்றான்.  

தொண்ணூற்று நாலு சுகமாய்க் கழிகிறது.

தென் ஆபிரிக்காவில் காந்தீயம் தன் வித்திலைகளை முகிழ்த்துவிட்டு மண் புதைந்தபோது - அதன் அடிவேர் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் அத்திவாரமானது.

பகிஷ்கரிப்பு, வேலை நிறுத்தம் சட்டமறுப்பு, ஒத்துழையாமை ஆகிய நான்கும் அதன் தூண்களாயின அண்ணல் காந்தி தன் அகிம்ஸைப் போரை - ஆரம்பித்த மண்ணைப் பிரிந்தபின் இரு தசாப்தங்கள் நிறவெறி அரக்கன் பசியில் வாடினான்

மண்ணின் மைந்தனாய் மண்டேலா பிறக்க

தாழ்த்தப்பட்ட கறுப்பன் சட்டம் பேசினான் அல்ஜீரியாவின் ஆயுதப்பயிற்சியால் அடித்தால் என்னை, அடிப்பேன் என்றான்

'பயங்கரவாதி' - பட்டம் கிடைத்தது

இந்தியக் கூலிகளுக்கு வழக்குரைத்ததால் ஆயுட்காலச்சிறையில் அடைபட்டிருக்கவேண்டிய அண்ணல் காந்தி அன்னை மண் மீண்டதால் நிறவெறியின் பசிக்கு தம்பி நெல்சன் மண்டேலா

இரையானது இருபத்தேழு வருடங்கள்

வாழ்க்கையின் வசந்தங்களை இழந்து போனாலும் வரித்துக் கொண்ட கொள்கையுடன் காதல் வாழ்வு இன்றுவரை தொடர்கிறது.

மனைவியர் வரலாம் போகலாம் - ஆனால் என் மக்களின் சுபீட்சமும் விடுதலையும் மாற்றப்பட முடியாதவை என்ற

வைராக்கியத்திலேயே வாழ்வு கழிந்தது

தன்னைக் கொடுமை செய்த நிறவெறி பிடித்த வெள்ளையரை நண்பராய் மதித்த நல்லவன் - அதனால்

லண்டனில் அவருக்கு வாழும் போதே சிலை

சமாதானத்திற்காக நோபல் பரிசு

 

 

 

கண் சுருக்கிச் சிரிக்கும் போதுஎங்கேயோ பார்த்த ஞாபகம் - ங்ஆ! எங்களுர் கணபதி மச்சானின் முகச்சாயல்

அதனால்:

அன்னியமான எண்ணம் வருவதில்லை. ஆனாலும்!

ஏனோ மனத்தில், எனக்குண்டு ஓர் தாபம்
ஐயா நீ ஈழத்தில் ஆறாத் துயரோடு

வாடும் எமக்காய் ஓர் வார்த்தை உதிர்க்கவில்லை – அதையெம் வர லாற்றில் பதிக்கவில்லை

உன்மண்ணில் எங்கள் உரிமைகளுக்காக ஓங்கிக்குரல் கொடுப்போர் உள்ளார்கள்

ஆனாலும்

இன்றுவரை நீயுன் இதயந் திறந்து தமிழ் ஈழத்திற்காதரவாய் ஏன் வார்த்தை சொல்லவில்லை?

ஆடி மாசத்தில் அவனிக்கு வந்தவனே ஆடிக் கலவரத்தால் அவலத்திற்குள்ளாகி நாடுவிட்டு நாடு நடைப் பிணங்களாய்த் திரிந்தோம் அப்போதும் உன் நா அசையலையே எங்களுக்காய்

தூரக் கலைத்துத் துயரனைத்தையும் சுமத்தி வேர் பாய்ந்த மண்ணை விட்டுப் பிடுங்கியெமை

இந்தவுலகில் இழிவு செய்த பேர்க் கெதிராய் உந்தனது செந் நா உரைக்கலையே ஓர் வார்த்தை

சுற்றமிழந்து சுகமிழந்து சொத்திழந்து எற்றுண்டு காற்றில் ஏதிலிகளாயாகி

காலக் கொடுமையினால் கண்ணிழியும் எங்களது கோலத்தைக் கண்டும் குமுறலையே உன்மனது

அன்புக் கணவர்களை அண்ணாமார் தம்பியரை, வன்புணர்வால் தங்கள் வாழ்வை, எல்லாமிழந்து

இன்று பரிதவிக்கும் எங்குலத்துப் பெண்களுக்காய் என்றும் கதைக்கலையே எங்களுக்காய் பேசலையே

எண்ணற்ற எங்கள் இளையோர் இனவெறியால் மண்ணிற் புதைந்தார் மனந்துடிக்க வாடுகிறோம் அண்ணலே உன்றன் அனுதாபம் எங்களுக்காய் இன்னும் திரும்பலையே ஏறெடுத்தும் பார்க்கலையே

அடக்கப் படுபவர்க்காய் ஆர்ப்பரிக்கும் உன் நாவு முடக்கபட நீ முகந்திருப்பி வாழ்வதென்ன என்ன நியாயமிது ஈழவர்க்கு வேறுண்டா

அண்ணலே இஃது அடுக்கா உன் சீர்த்திக்கு

ஆனாலுமென்ன அன்பனே நின்புகழென் பேனா எழுதப் பிணங்காது ஆதலினால் இன்னும் பல்லாண்டு இருந்துலகில் ஏதிலர்க்காய் உன் நா அசைய உரைக்கின்றேன் நல்வாழ்த்து.

(இது ஒரு பேப்பரில் வெளிவந்தது)

 

நெல்சன் மண்டேலா